களத்தில்

  • 1943
  • 1944
  • 1945
  • 1946
  • 1948
  • 1949
  • 1952
  • 1953
  • 1958
  • 1959
  • 1973
  • 1974
  • 1975
  • 1976
  • 1977
  • 1978
  • 1943

    செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் - தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்டு அய்யாவின் தொண்டராகப் பணியாற்ற வந்தார்.

    1943 அய்யாவின் தொண்டரான அன்னை முதன்முதலாக மேடை யேறிப் பேசியது காயல்பட்டினம் அருகில் உள்ள குலசேகரப்பட்டினம் கனக நாயகம் சீதக்காதி விழா.

  • 1944

    சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமாக மாறிய மாநாட்டில் (27.8.1944) காந்திமதி என்ற கே.ஏ.மணி, கே.அரசியல் மணி என்று மாற்றப்பட்டு மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு உரையாற்றினார்.

    அன்னையின் முதல் கட்டுரை இரண்டும் ஒன்றே - கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே என்பதாகும்.

    பெண் கல்வி தோழர் மணியம்மை சொற்பொழிவு எனும் தலைப்பில் 19.8.1944 குடிஅரசில் வெளியானது.

    பாரதி விழா எனும் தலைப்பில் மணியம்மை எனும் பெயரில் எழுதிய கட்டுரை ஆகியன வெளியாயின (9.12.1944).

    (பிற சமயமும் நம் (இந்து) சமயமும், (12 வருடத்துக்கு முன் ஒரு இந்துப் பெண் எழுதியது, மணி தொகுத்தது கட்டுரை குடிஅரசில் (9.12.1944)

    தேவர்களின் காம விகாரம் - மணி திரட்டியது (குடிஅரசு 20.12.1944)

    அம்மாவின் முதல் வடபுலப் பயணம் - முதன் முதலாகக் கல்கத்தாவிற்கும் பின்னர் கான்பூருக்கும் பயணம் 21.12.1944 முதல் 6.1.1945 வரை, திராவிடர் கழக மாநில நிருவாகக் குழுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அம்மா முதன் முதலாகப் பங்கேற்றார்.

  • 1945

    சீதையைப்பற்றிய நடுநிலை ஆராய்ச்சி எனும் தலைப்பில் அன்னையின் கட்டுரை (10.11.1945)

    அம்மாவின் முதல் வடபுலப் பயணம் - முதன் முதலாகக் கல்கத்தாவிற்கும் பின்னர் கான்பூருக்கும் பயணம் 21.12.1944 முதல் 6.1.1945 வரை, திராவிடர் கழக மாநில நிருவாகக் குழுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அம்மா முதன் முதலாகப் பங்கேற்றார்.

  • 1946

    திராவிடர் கழக நிருவாகக்குழு கூட்டம் 23.6.1946இல் ஸ்பெஷல் அர்ஜன்ட் எக்சிக்யூடிவ் கமிட்டி மீட்டிங் அன்னையார் பங்கேற்பு. (விடுதலை 18.6.1946 நடைபெறுவதாகச் செய்தி அறிவிப்பு)

    6.6.1946 முதல் வெளியிடப் பெற்ற விடுதலையில் ஆசிரியர், வெளியிடுபவர், அச்சிடுபவர் என அன்னை பொறுப்பு ஏற்றல் (1978 வரை அப்பொறுப்பை வகித்தவர் அவர்).

  • 1948

    டிசம்பர் 20-ஆம் நாள் குடந்தையில் நடந்த மொழி உரிமைப் போரில் அரசு தடையை மீறியதற்காக கைது செய்யப்பட்டு, பாபநாசம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். (21.6.1948இல் செலுத்தப்பட்டது)

    செல்வி மணியம்மையாருக்குச் சென்னை அரசின் தலைமைச் செயலர், விடுதலை வெளியீட்டாளர் ஆன ஸ்ரீ கே.ஏ.மணி, பாலகிருஷ்ண பிள்ளை தெரு, சிந்தாதிரிப் பேட்டை, சென்னை எனும் முகவரியிட்டு, 1931ஆம் ஆண்டைய இந்தியன் பிரஸ் (எமர்ஜென்சி) பவர்ஸ், சட்டம் 7(3) பிரிவுப்படி நடவடிக்கை எடுக்கும் வகையில் ரூ.2,000 ஜாமீன் 15.6.1948க்குள் சென்னை மாநில முதன்மை நீதிமன்ற நீதிபதியிடம் செலுத்த ஆணை.

    22.8.1948இல் சென்னையில் பெரியார் இல்லத்தில் திராவிடர் கழக நிருவாகக் குழுக்கூட்டம் நடைபெற்ற போது, காவல்துறை ஆணையாளர் அங்குக் கூடியிருந்த அனைவரையும் கைது செய்வதாகக் கூறிக் கைது செய்து காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திலும், சென்பெனிடன் ஹியரிங் சிறையில் வைத்தார். பெரியார், அண்ணா, வேதாசலம் முதலானவர்களுடன் சிறை வைக்கப்பட்ட அன்னையார் இரு நாட்களுக்குப் பின் விடுதலை ஆனார்.

  • 1949

    பிப்ரவரி மாதம் 23ஆம் நாள் வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த மணியம்மையாரை தந்தை பெரியார் வரவேற்றார்.

    மார்ச் மாதம் 29 ஆம் நாள் சென்னையில் மணியம்மையார் தலைமையில் இந்தி எதிர்ப்பு மறியல் போர் நடந்தது.

    மணியம்மையின் மீது 8.9.1949இல் சம்பத் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 1949இல் பெரியாருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

  • 1952

    22.02.52 இல் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. இதே ஆண்டில் திருச்சியில் இருந்த குழந்தைகள் காப்பகக் குழந்தைகளால் பேணி வளர்க்க வேண்டிய பொறுப்பினை மேற்கொண்டார்.

    திராவிட விவசாயத் பொறியாளர் மாநாடு கள்ளக்குறிச்சி வட்டத்தில் கூட்டியபோது அம்மாநாட்டில் தலைமை உரையை அம்மா ஆற்றினார்.

  • 1953

    18.9.53இல் திரு.வி.க. மறைவுக்கு வருத்தம் தெரிவிக்க அய்யாவுடன் சென்னை வருகைபுரிந்தார்.

  • 1958

    19-1-1958 விடுதலையில் வெளியான இளந்தமிழா! புறப்படு போருக்கு என்ற கட்டுரை சம்பந்தமாக அதன் ஆசிரியரும், வெளியிடுபவருமான ஈ.வெ.ரா.மணியம்மையார் மீது வழக்குத் தொடரப்பட்டது. மணியம்மையாருக்கும், கட்டுரையை எழுதிய தோழருக்கும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

    மார்ச் மாதம் 8ஆம் நாள், ஜாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட தோழர் பட்டுக்கோட்டை ராமசாமியும், 10ஆம் நாள் மணல்மேடு வெள்ளைச்சாமியும் மாண்டனர். இவர்களின் சடலத்தைத் தர சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அந்த நேரத்தில் மணியம்மையார் அவர்கள் முதலமைச்சர் காமராசர் அவர்களைச் சந்தித்து மறைந்த தோழர்களின் உடல்களைத் திரும்பப் பெற்றார். மணியம்மையார் தலைமையில் சவ ஊர்வலம் நடந்தது.

    கடலூர் சி.எஸ்.கிருஷ்ணசாமி அவர்கள் மகன் கி.வீரமணி, கோட்டையூர் சிதம்பரம் ரங்கம்மாள் சிதம்பரம் அவர்கள் மகள் மோகனா ஆகியோர் வாழ்க்கைத் துணைநல விழா 7.12.1958 அன்று திருச்சியில் நடைபெறும் எனப் பெரியாரும் மணியம்மையாரும் கையெழுத்திட்டு அழைப்பிதழ். மணமக்களும் பெரியாரும் மணியம்மையாரும் கடலூர் மணமகன் இல்லத்திற்கும், திருவண்ணாமலையில் மணமகள் இல்லத்திற்கும் சென்றனர். அய்யா அவர்கள் 32 மாதச் சிறைத்தண்டனை பெற்று உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த போதும் கழகத்தின் கொள்கைப் பிரச்சாரத்தை அம்மா தடையின்றி நடத்தினார்.

    10.05.1958, 11.05.1958 ஆகிய இரு நாட்களில் சாதி ஒழிப்பு, திராவிடர் கழக மாநாடுகள் புரட்சிக்கவிஞர் தலைமயிலும், சாதி ஒழிப்பு மாநாடு டாக்டர் மா.இராசமாணிக்கனார் தொடங்கி வைக்கவும் அம்மா அன்று கலந்து கொள்ள நடைபெற்றன.

  • 1959

    தந்தை பெரியார் அவர்களும், கழக முன்னணியினரும் சிறையில் இருந்த முக்கியக் காலகட்டத்தில் கழகம் சோர்வடையாமலும், கழகப் பணி, நிர்வாகப் பணிகளைத் திறமையாகக் கவனித்துக் கொண்டதற்காகவும் அன்னை மணியம்மை யாருக்குத் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் (19.7.1959) பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • 1973

    டிசம்பர் 24ஆம் நாள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் மறைவுற்ற பின் அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத் தலைவர் பொறுப்பேற்றுக் கழகத்தை வழிநடத்திச் சென்றார்.

  • 1974

    திருச்சி பெரியார் மாளிகையில் 6.1.1974-இல் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு, மணியம்மையார் அவர்களை கழகத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது.

    3.4.1974 அன்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வகை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சென்னை தலைமை அஞ்சலகம் முன் மறியல் கிளர்ச்சி செய்தார். இப்போராட்டத்தின் 2ஆம் கட்டமாக 26.5.1974 அன்று சென்னை வந்த டில்லி அமைச்சர் ஒய்.பி.சவானுக்கு கருப்புக் கொடி காட்டினார்.

    அன்னை மணியம்மையார் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருதி அன்னை மணியம்மையார் அவர்களுக்கே கூடத் தெரியாத நிலையில் தந்தை பெரியார் அவர்களால் ஏற்பாடு செய்து வைத்திருந்த சொத்துகளைத் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல் மக்களின் பொது நலனுக்கே அவை பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உடல் நலமின்றி, தாம் சென்னைப் பொது மருத்துவமனையில் இருந்தபோது அன்னை மணியம்மையார் அவர்கள் 23.9.1974 அன்று பெரியார் -மணியம்மை கல்வி அறக்கட்டளைக் கழகம் துவக்கப்பட ஏற்பாடு செய்தார்கள். அந்த அமைப்பு 24.9.1974 அன்று சென்னையில் பதிவு செய்யப்பட்டது. அந்த அறக் கட்டளைக்கு அன்னை மணியம்மையார் அவர்கள் தலைவராக வும், கி.வீரமணி அவர்கள் செயலாளராகவும் இருந்தார்கள்.

    டிசம்பர் 25ஆம் நாள் சென்னை - பெரியார் திடலில் நடந்த இராவண லீலா நிகழ்ச்சி சம்பந்தமாகக் கைது செய்யப் பட்டார். இது சம்பந்தமாக வழக்குத் தொடரப்பட்டது.

    பெரியார் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மய்யத்தை நிறுவினார். பெரியார்- மணியம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளியை திருச்சியில் ஏற்படுத்தினார்.

  • 1975

    ஏப்ரல் 26-இல் வைக்கக்கத்தில் நடைபெற்ற வைக்கம் பொன்விழாவில் கலந்துகொண்டு பெண்கள் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

    சென்னை அண்ணா சாலையில் 21.9.1975 அன்று கலைஞர் சிலையை அமைத்து திறப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

  • 1976

    செப்டம்பர் 9ஆம் நாள் இராவண லீலா வழக்கில் மணியம்மையார் மற்றும் தோழர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. வழக்கை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. மிசா காலத்தில் 16.9.1976 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு முதல் நாள் திடீரென்று கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.

  • 1977

    ஏப்ரல் 25ஆம் நாள் இராவண லீலா வழக்கில் மணியம்மையாரும், மற்ற தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

    அக்டோபர் மாதம் 30-ஆம் நாள் தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, தமது உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த நிலையிலும் கருப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.

    பெரியார் திடல் முகப்பில் பெரியார் பில்டிங்ஸ் என்ற ஒரு பெரிய கட்டடத்தை உருவாக்கினார்.

  • 1978

    மார்ச் மாதம் 16ஆம் நாள் மாரடைப்பு நோயால் சென்னை பொதுமருத்துவமனையில் காலமானார்.

    1978இல் தாம் மறையும் முன்தான் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் திரு.வீரமணி அவர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்.