நம் இழிவைப் போக்க அல்லும் பகலும் அயராது உழைத்து,மக்களுக்குப் பகுத்தறிவைப் போதித்து, பெரியாரின் கொள்கை பரப்பித் தொண்டு செய்வதே, நம் வாழ்நாள் லட்சியமாகும்.
நம்முடைய பொருளாதார இழிவும், நமக்கு நம் நாட்டு உரிமையற்ற தன்மையும் ஒழிந்து நாமெல்லோரும் நலமுற வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திராவிடர் கழகம் பாடுபட்டு வருகிறது.
மேல் ஜாதிக்காரர்களான பார்ப்பனர்களில்தொழிலாளர்கள் எவரும் இல்லை. ஆனால், நம் நாட்டு விசித்திரங்களில் ஒன்று _ தொழிலாளர் தலைவர்களாகப் பார்ப்பனர்களே பெரிதும் இருந்து வருவது.
நாம் அணியும் கருஞ்சட்டை _ நம்மைப் பார்த்தவுடன் இவர்கள் சமுதாயத் தொண்டு செய்பவர்கள்,மூடநம்பிக்கையை ஒழிப்பவர்கள், ஜாதியை ஒழிப்பவர்கள் என்பதை அடையாளப்படுத்துவதோடு, பெரியாரின் தொண்டர்கள் என்று பாராட்டுவதாக இருக்கட்டும்!
பஞ்ச பூதங்களையும், கிரகங்களையும், அறியாமையினால் தேவர்கள் என்று எத்தனையோ காலத்துக்கு முன் ஒரு பயித்தியக்காரன் எழுதி வைத்ததையெல்லாம் இந்த இருபதாம் நூற்றாண்டில் நம்பிக்கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தால் அவரைப்போல சர்வ முட்டாள் யாரும் இல்லை.
இராவண லீலா என்பது வடவரின் இராமலீலாவின் எதிரொலி, தவிர்க்க முடியாத விளைவு என்பதையும், அதன் பின்னால் கோடிக்கணக்கான தமிழர்களின் மானமும், மரியாதையும், கவுரவமும், உணர்ச்சியும், அடங்கியிருக்கிறது என்பதையும், மிக நல்ல வண்ணம் தந்தையின் தனிச்சிறப்பு வாய்ந்த தனயன் என்ற முறையில் தமக்கே உரித்தான தனித் திறமையோடு சுட்டிக்காட்டி இருக்கிறார் அறிஞர் அண்ணா.